"இந்தாம்மா, உனக்கு கட்டுனா குடு, இல்லியா போய்கிட்டே இரு.இந்த முட்ட இல்லாட்டி, எங்களுக்கு வெளில முட்ட கெடைக்காதா என்ன?என்னமோ வைரத்த பாக்கிறதா மாதிரி, தொட விட மாட்டேன்கிற."
"அப்படியிலங்கம்மா.இது நாட்டுக்கோழி முட்டம்மா.காசு கொஞ்சம் சாஸ்தி.கவனம் இல்லாம இருந்தம்னா, ஒடஞ்சிரும்.இதுவே நான் கடனுக்கு காசு வாங்கித் தான் கொண்டுக்கிட்டு வாரேன்."
"நிறுத்தும்மா.உன் கதைய கேட்கல்லாம் எனக்கு நேரம் இல்ல.என் மகன் ஸ்கூல் பஸ் வர்ற நேரத்தில நான் போய் நிக்கல, என் நிலைமையே வேற.வீடு ரெண்டாயிரும். திரும்பவும் சொல்றேன்.உனக்கு கட்டுனா குடு.இல்லையா எடத்த காலி பண்ணி போய்கிட்டே இரு."
"அப்படி சொல்லாதீங்கம்மா. நானும் என் பிள்ளைங்கள பாக்க பள்ளிக்கூடம் போகணும்.நீங்க 50 பைசா பாக்காம உதவி பண்ணனும்.இடுப்பில பிள்ளைய வச்சுகிட்டு, தலைச்சுமையோட முடியலம்மா.இத வித்தா தான், எங்களுக்கு சோறு."
அரைகுறை மனத்தோடு உள்ளே சென்ற அந்த மகராசி 6 முட்டைக்கு ரூ.21 க்கு ரூ.1 குறைத்துக் கொடுத்து விட்டு "சில்லறை இல்ல. அடுத்தவாட்டி சேத்து வாங்கிக்கோ " என்றாள். அடுத்து வரும் போது ஞாபகத்துல இல்லன்னு சொல்லிடலாம், ஆனா, இன்னைக்கு ரூ.1 லாபம் என்று தன் குடும்பம் நடத்தும் விதத்தை எண்ணி பூரித்துக் கொண்டே உள்ளே சென்றாள்.
சே, ஒரு ரூபாவுக்கு எவ்வளவு கெஞ்ச வேண்டியிருக்கு.ஆனாலும் அந்த அம்மாவுக்கு மனசு இல்லியே.போகட்டும். என் புருஷன் மட்டும் இருந்தா, "பூமால உன் பேருக்கு ஏத்த மாதிரி பூ மாதிரி பாத்துப்பேண்டி.நா இருக்குற வரைக்கும் நீ எதப் பத்தியும் கவலைப்படாதே. உன்னைய உள்ளங்கையில வச்சுப் பாப்பேன்டி"ன்னு அடிக்கடி சொல்விங்கலே. ஒரு தண்ணிக்குடம் தூக்க விடமாட்டீங்களே. இப்ப தெருத் தெருவா, முட்டக் கூடைய சுமந்துக்கிட்டு போறேனே, இதப் பாத்தா மனுஷன் துடிச்சில்ல போயிருவீங்க.எங்க இருக்கீங்க. என் மனசு பேசுறது கேட்குதா. இப்படி நாலு பிள்ளைகள என் கையில குடுத்துட்டுப் போயிடீங்களே.ஏன் எங்கள விட்டுட்டு போனீங்க.நாம உயிரா நெனைக்கிறவங்க எங்கயும் போறதில்ல.நம்ம பக்கத்திலேயே தான் இருக்காங்கன்னு சொல்றாங்க.நீங்க எங்க இருக்கீங்க. காத்தோட காத்தா இருக்கிற உங்களுக்கு நா பேசுறது கேட்குதா.
தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்டு, தன்னுடைய அன்பின் அடையாளமாய் ஐந்து வருடங்களில் நான்கு பிள்ளைகளை கொடுத்து விட்டு, "வேலைக்கு போயிட்டு சீக்கரம் வந்திறேன்மா"ன்னு சொல்லி உயிரோட போய்விட்டு செத்த உடலாக திரும்பி வந்த தன் கணவனை நினைத்து அழுகை பாதி, கோபம் மீதியாக, தனக்குள்ளயே பிதற்றிப் பிதற்றி பேதலித்துப் போனாள் பூமாலை.
தன் வாழ்க்கை ஆரம்பித்தவுடனேயே சருகாய் சரிந்த போதும் அழுகக் கூட பிடிக்காமல் இறுகித்தான் போய் இருந்தாள்.வாய் மட்டும் போகாதீங்க. போகாதீங்க.போய்டீங்களா.போகாதீங்கன்னு, அவன் விட்டுப்போன நாள் முதல் இன்று வரை முணுமுணுத்துக்கொண்டே இருந்தது.அவளை அப்படிப் பார்த்தவர்கள் சொன்னது, "அழுதிரும்மா. இப்படி சிலையா இருக்கக் கூடாதும்மா. அழுதிரும்மா. ஆயி, அப்பும் சொல்லி சொல்லி மாய்ந்து போனதுண்டு. நான் அழ மாட்டேன். அழக்கூடாது.யார் இவர எங்களையெல்லாம் விட்டுட்டு போகச் சொன்னது. இதைத் தொடர்ந்து ஒட்டிக் கொள்ளும் கேள்வி, "ஏன் போனீங்க, எங்கள எல்லாம் விட்டுட்டு ஏன் போனீங்க"ன்னு தனக்குள்ளேயே கேட்டுக் கேட்டு விடை கிடைக்காமல் வைராக்கியமாய், இன்றுவரை அழுகாமல், அழுத்தமாய் இருந்தாள்.
நிகழ்கால நிலைமைக்கு கடந்த காலத்தைப் பழித்துப் பேசியே பழக்கப்பட்டு போனவர்கள் நாம்.பூமாலை மட்டும் என்ன விலக்கா இதற்கு. இப்படி தனக்குள் பேசிக் கொண்டே நடந்தவள் பள்ளிக்கூடம் விடுவதற்கு நேரம் குறைவாக இருப்பதை உணர்ந்து தன் நடையின் வேகத்தைக் கூட்டினாள்.
இடுப்பிலிருந்த பிள்ளைக்கு, பிஞ்சு போன ரப்பர் பொம்மையைக் காட்டிக் காட்டி நடையைத் தொடர்ந்தவள், பள்ளிக்கூடத்தின் வாசல் கதவு பூட்டியிருந்தது கண்டு அப்பாடா மணி அடிப்பதற்கு முன்னமே வந்து விட்டோம். நல்ல வேளை. இல்லையினா, என் பிள்ளைகைளை இன்னைக்கும் பாக்க முடியாமப் போயிருக்கும் என்று நினைத்தவள் தன தலைச்சுமையையும் பொருட்படுத்தாமல், இடுப்புப் பிள்ளையோடு, உள்ளே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளை எட்டிப் பார்த்தாள்.தன்னை யாரும் பார்க்கிறார்களா என்பதைக் கூட அறியாமல் அங்கே விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பிள்ளைகளில் தன் பிள்ளைகள் இருக்கிறார்களா என்று கண்களால் துளாவிக் கொண்டிருந்தாள் பூமாலை.
தலைமை ஆசிரியர் எதார்த்தமாக வெளியே வந்தவர், " யாரும்மா நீ. என்ன வேணும் உனக்கு. இங்க என்ன பண்ற" என்று கேட்க, பக்கத்தில நின்ன யாரோ, "அவ முட்டக்காரிங்க.நாட்டுக்கோழி முட்டை வியாபாரம் செய்றா." என்று சொல்ல, "முட்டஎல்லாம் இங்க யாரும் வாங்க மாட்டோம்மா. அரசாங்கம் குடுக்கிற முட்டையே போதுமான அளவுக்கு இருக்கு. அத சாப்டிட்டு இதுக படுத்திற பாடு.இதுல நாட்டுக்கோழி முட்ட வேறயா. வியாபாரம் பண்ண வேற இடம் பாரு.போ போ." என்று சொல்லி திரும்பியவர் , "மணி அடிப்பா, நேரம் ஆயிருச்சு." என்றார்.
மணி அடித்து அரை மணி நேரம் ஆகியிருந்தது."முனியாண்டிபுரம் போற மூணாவது ட்ரிப் வந்திருச்சாப்பா," என்று சொல்லி வெளியே வந்தவர், பூமாலைப் பார்த்தவுடன் கோபமாகக் கேட்டார்.
"ஏம்மா, நான்தான் அப்பவே சொன்னேனே. இது பள்ளிக்கூடம் . இங்க முட்டை வியாபாரம் எல்லாம் செய்யக் கூடாதுன்னு. பிறகு எவ்வளவு தைரியமா பள்ளிக்கூடத்துக்குள்ளயே வந்து உட்கார்ந்து இருக்கிற. எந்திரிம்மா."
அவ்வளவு நேரம் வெயிலில் அலைந்து விட்டு, நிழலைக் கண்டதும் உட்கார்ந்து விட்ட பூமாலை, அவர் எந்திரிம்மான்னு சொன்ன உடனேதான், தன் மரியாதைக்குறைவை எண்ணி வேக வேகமாக எழுந்தாள்.எழுந்தவள்,
"ஐயா, இல்லைங்கையா. என் பிள்ளைங்க இங்க படிக்கிறாங்க.அவங்கள பார்த்துட்டுப் போகலாம்னுதான்யா வந்தேன். நேத்திக்கும் பாக்கல."
"ஏம்மா, நீ அவங்க அம்மாதானே. அவங்க உன்கூட இல்லையா.ஏன் அவங்கள பள்ளிக்கூடத்துல வந்து பாக்கிற. கூட்டிட்டுப் போறதுக்கு வந்தியாம்மா."
"இல்லைங்கையா.அவங்க என்கூட இல்ல.எனக்கு நாலு பிள்ளைக.வீட்டுக்காரு சித்தாள் வேலை பாத்துக்கிட்டு இருந்தாரு.கட்டடத்துல வேலை செய்யும் போது, மேல் மாடியில இருந்து விழுந்து செத்துப் போனாரு.நான் எதுவும் பெருசா படிக்கல.நாலு பிள்ளைகள வச்சு கஞ்சி ஊத்த முடியல.அதான் இங்க பக்கத்துல முனியாண்டிபுரத்தில, மூத்த ரெண்டு பிள்ளைகள ஒரு காப்பகத்தில விட்டிருக்கேன்.சோறு, தண்ணி அவங்க கொடுத்திருவாங்க.காசு எதுவும் இல்ல.நான் இப்பிடி வியாபாரத்துக்கு வந்திட்டு தினமும் பிள்ளைகளைப் பாத்திட்டுப் போயிருவேன். நேத்திக்கு வரல. மூணாவது பிள்ளைக்கு ஊசி போட கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன்.என்னையப் பாக்கலேன்னா எந்த ரெண்டு பிள்ளைகளும் தவிச்சுப் போயிருவாங்க. அம்மா, அம்மான்னு ஏங்க ஆரம்பிச்சிடுவாங்கய்யா. அதான் உட்கார்ந்த்திட்டேன்."
"ஏம்மா, உனக்கு அம்மா, அப்பா இல்லையா. அவங்கள்ட்ட விடலாம்ல. பாத்துக்க மாட்டாங்களா. அவங்களும் இந்த ஊரா.இல்ல வேற ஊரா." என்று கேட்டுக்கொண்டிர்ருக்கும் போதே, வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் பூமாலையைச் சூழ்ந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
"இந்த ஊர்தாங்கையா.அவங்க கூப்பிட்டுக்கிட்டு தான் இருக்காங்க. எனக்குத்தான் போக மனசில்ல."
"ஏம்மா, அவங்க பிள்ளைகள பார்த்திக்கிட்டா, உனக்கு பாரம் குறையுமில்ல."
இத்தனை நேரம் பேசிய வேகம் இப்போது அவரிடம் இல்லை.
"பாரமா, என் பிள்ளைங்களா , எனக்கு அவரு விட்டுட்டு போன செல்வம்.ஆயி, அப்பன் காடு கரைய வித்து என்னைய கலியாணம் பண்ணிக் கொடுத்ததும் போதும். கடன்ல கஷ்டப்படறதும் போதும். வானம் பாத்த பூமிங்க. விளைச்சல் இருக்கிறப்ப சரி.பாப்பாங்க. இல்லாதப்ப... அதான், என் கை, காலு நல்லா இருக்கிற வரைக்கும் என் பிள்ளைகள நானே பாத்துக்கிருவேன்னு சொல்லிட்டேன்.அவரு இருந்த வரைக்கும் ..." வார்த்தைகள் மூச்சுக்குழலின் இறுக்கத்தில் வெளியே வர முடியாமல் சிக்கி செத்துக் கொண்டிருந்தது. "இப்பல்லாம் இந்த பிள்ளைகள விட்டா வேற கதியே இல்லைங்கையா" என்று நா தழுதழுக்கச் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அவளுடைய நான்கும், மூன்றும் வயதுமான பிள்ளைகள் கை நிறைய திண்பண்டங்களை வாங்கிக் கொண்டு, தன் அம்மாவையும், சுற்றியிருந்த ஆசிரியர்களையும் பார்த்துக்கிட்டே அவளிடம் வந்து சேர்ந்தனர்.தன் பிள்ளைகளைப் பார்த்த உடனேயே அழக்கூடாது என்ற வைராக்கியம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டது.
"இந்த முட்ட வியாபாரம்தான்யா.இத விட்டா வேற பொழப்பு தெரியாது.தெருத் தெருவா அலைஞ்சு முட்டைய வித்தாதான் கஞ்சி.இந்த சின்னப்பயல வீட்டுல விட முடியல.வெய்யில்ல கூட்டிட்டு போறதத் தவிர வேற வழியில்ல. யாருகிட்டயும் இருக்காது.ஒண்ண பக்கத்து வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன். அது என்ன பண்ணுதுன்னு மனசு ஒரு பக்கம் அடிச்சிக்கிட்டுருக்கும்.இந்த ரெண்டு பிள்ளைகளையும் பாக்கல்லேன்ன ஏங்கிப் போயிருவாங்க சாமி. அதான்.இனிமே வெளியேவே உட்கார்ந்துக்கிறேன்யா. வெயில் சாஸ்தியா இருந்ததால தான் அசந்து உட்கார்ந்திட்டேன்."என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேன் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
"அழகு பெத்த பிள்ளை.வயசு இருவதுதான் இருக்கும்.நிலமையைப் பாரேன்.பெண் பிள்ளைகளுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம்.இந்த குடும்பமே இவள நம்பித்தான்...."என்று சொல்லி ஆத்துப்போனார் ஒரு ஆசிரியர்.
"அழகு பெத்த பிள்ளை.வயசு இருவதுதான் இருக்கும்.நிலமையைப் பாரேன்.பெண் பிள்ளைகளுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம்.இந்த குடும்பமே இவள நம்பித்தான்...."என்று சொல்லி ஆத்துப்போனார் ஒரு ஆசிரியர்.
"எனக்கு பத்து முட்ட குடு." "எனக்கு பன்னிரண்டு முட்ட குடு."ன்னு விலையைக்கூட கேட்காமல் அத்தனை ஆசிரியர்களும் வாங்க ஆரம்பித்தனர்.
"சார், வேன் கிளம்பலாமா. அந்த ரெண்டு பசங்களும் இந்த ட்ரிப்ல தான் வருவாங்க.கூட்டிட்டு போகவா" என்று ஓட்டுனர் வந்து கேட்ட போது, அவளுடைய ரெண்டு பிள்ளைகளும், தன் கையிலிருந்த திண்பண்டங்களை அப்படியே தரையில் போட்டு விட்டு ஆளுக்கொரு காலைக் கட்டிக்கொண்டு,
"அம்மா, நான் போகலம்மா.என்னைய விட்டுட்டு போகாதம்மா.நான் போகலம்மா.நான் போகலம்மான்னு, மழலை மணம் மாறாத மொழியில் சொல்லி அழ ஆரம்பித்த போது, அங்கு கூடியிருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்.
உயிர்களை முட்டைகளாகச் சுமந்து வரும் முட்டைக்காரிக்கு தன் உயிரின் ஓலத்தைக் கேட்கும் போதே, கண்களின் பனிக்குடம் இத்தனை நாள் தேக்கி வைத்திருந்த வைராக்கியம் என்னும் கரை கரைத்து பூமியைத் தொட்டிருந்தது.
No comments:
Post a Comment