Tuesday, 9 August 2011

டீச்சர் அம்மா

எல்லாரும் வாயத் திறந்து சொல்லுங்க.அ - ன, ஆவன்னா, இ -னா, ஈயன்னா, - சரி எல்லாரும் இன்னொரு முறை சொல்லுங்க. அ-னாவுக்கு என்ன படம் இருக்கு. எடுத்துக் காட்டுங்க. பாப்பா,குட்டிப் பாப்பா, அந்த படத்தப் பார்த்தது போதும். அடுத்த அட்டைய எடு. அந்த அட்டைய கீழ வைம்மா. "அம்மா, அம்மா" - படத்தைப் பார்த்தபடி, அந்தக் குழந்தை அந்தப் படத்திற்கு முத்தம் வைத்தது.

"அம்மாதான், பரவாயில்லையே, நல்ல பிள்ளை.பாப்பா, நல்ல அறிவாளி தான்.வேற படங்கள் எல்லாம் எடும்மா.அம்மா படத்த  கீழ வை.பாப்பா நல்ல பாப்பால்ல. நான் சொன்னா கேப்பில்லம்மா." டீச்சருக்கு ஒரே ஆச்சரியம், சொல்லிக் கொடுக்காமலேயே அந்தக் குழந்தை அ-ன்னா அம்மாவை எடுத்துக் காட்டியது. கீழேயும் வைக்கவில்லை. அம்மா,அம்மா என்று சொல்லிக் கொண்டே இருந்தது.

இரண்டொரு முறை சொல்லிப் பார்த்த டீச்சர் அதற்கு மேல் சொல்லாமல் விட்டு விட்டார்.பள்ளியில் சேர்ந்து மூன்று நாட்கள் ஆகியும் குழந்தை யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாடம் சொல்லவில்லை.தமிழ் பாட நேரத்தின் போது மட்டும் , அம்மாவும் குழந்தையுமாகவுள்ள ஒரு அட்டையை வைத்துக் கொண்டு "அம்மா அம்மா" என்று மட்டும் சொன்னது. குழந்தைகள் பள்ளி மாறும் போது அல்லது முதன்முதலாக பள்ளியில் சேரும் போது அல்லது அம்மாவை விட்டு தாத்தா பாட்டியிடம் தனித்து வளரும்போது இந்த மாதிரியான மாறுதல்களை குழந்தைகளிடம் காண்பது சகஜம். பள்ளிக்கு வந்த ஒரு சில மணி நேரம் பிள்ளைகள் அவ்வாறு இருக்கும்.பிறகு, பாட்டு பாட, ஆட, ஓட , தன் சகஜ நிலைக்கு வந்து சிரிக்கும்.

ஆனால் இந்தக் குழந்தை வந்த நாள் முதல் பாடம் சொல்லாது அம்மா படத்தை மட்டுமே வைத்து அதனைக் காட்டி காட்டி அம்மா அம்மாஎன்று சொல்வதும், அதன்மேல் படுத்துக் கொள்வதும், பிறகு அழுதுகொண்டே தூங்கி விடுவதும் டீச்சருக்கு சிறிது கலக்கத்தைக் கொடுத்தது.

"தைரியலட்சுமி பாப்பாவை யாரும்மா காலைலேயும், சாயங்காலமும் ஸ்கூல்ல விட்டுட்டு போறது. இந்தப் பள்ளிகூடத்தில, அவளோட அண்ணன், அக்கா யாராவது படிக்கிறாங்களா?" எல்லாப் பிள்ளை மொட்டுக்களுமே மௌனம் சாதித்த நிலையில், "அவ தாத்தா தான்" ஒரு மழலை மட்டும் வாய் மலர்ந்தது.

"நீ பார்த்திருக்கியா செல்லம்" - டீச்சர் தூக்கிக் கொஞ்சாத குறையாக அதன் அருகில் அமர்ந்து கேட்டார்.

"ம். என்கூட வருவா." பிள்ளைமொழி நெஞ்சத்தைக் கிள்ளியது.

"சரி அவ தாத்தா கூப்பிட வரும்போது என்கிட்டே காட்டு. நான் அவர்கிட்ட பேசணும். சரியா." எல்லாம் புரிந்தது போல் தலையை மட்டும் ஆட்டியது அந்தக் கொடி மலர்.

மாலை மூன்று மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை எழுப்பி விட்டு, அந்தக் குழந்தைகள் கையில் அவரவர் பையைக் கொடுத்து வீட்டுக்கு தயார் நிலையில் உட்காரவைத்து விட்டு, அங்கு பரப்பிக் கிடந்த அட்டைகளையும், படங்களையும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்.

"தாத்தா" - டீச்சரை தொடாமல் தொட்டுச் சொன்னது ஒரு பாப்பா.

"யாரு தாத்தாம்மா? உங்க தாத்தாவா?" காலையில் நடந்ததை வேலையின் காரணமாக தற்காலிகமாக மறந்து போயிருந்தார் ஆசிரியர்.

"அவ தாத்தா" மறுபடியும் குழந்தை சொல்லிய வண்ணமே தைரியலக்ஷ்மியின் பக்கம் கை காட்டியது.

"சமத்து. ஞாபகமா சொல்லிட்டியே. உனக்கு நாளைக்கு டீச்சர் ஒரு மிட்டாய் தருவானாம். சரியா." மிட்டாய் என்று சொன்னதும் கரு மேகத்திரை விலகிச் சிரிக்கும் பிறைநிலா போல, தன் சந்தோஷத்தை பற்களில் சிதறடித்தாள் அந்த அரும்பு.

"வாங்க. நீங்கதான் தைரியலக்ஷ்மியோட தாத்தாவா?" டீச்சர் கேட்டுக்கொண்டே எழுந்து நின்றார்.

"ஆமாங்கம்மா.ஏம்மா. தைரியலக்ஷ்மி எதுவும் தொந்தரவு கொடுத்தாளா." ஏக்கத்தோடு அந்தக் குழந்தையைப் பார்த்தார் பெரியவர்.

"குழந்தைகள் என்றைக்குமே தொந்தரவு இல்லைங்கையா. என்ன பெரிசா தொந்தரவு குடுத்திரப் போகுதுங்க.பெரியவங்களோட கவனம் அவங்க மேல இருக்குன்னு தெரியறவரைக்கும் தான் அவங்க அழுவதும், சேட்டை செய்வதும். ஆனா, தைரியலக்ஷ்மியோட அழுகை என்னோட கவனத்த வாங்கறதுக்காக இல்ல. அவள நானும் மூணு நாளா பாக்கிறேன். அழுகை நின்னபாடில்லே. அந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சு. அம்மா படத்த தூக்கி வச்சுக்கிட்டு குடுக்காம, அம்மா, அம்மான்னு அழுதுகிட்டே இருக்கா.வீட்டில எதுவும் பிரச்சனையா?" என்றார் டீச்சர்.

"டீச்சரம்மா, அந்தப் பிள்ளைக்கு அம்மா இல்ல. என் மக பிள்ள பேத்தி தான்.தைரியலக்ஷ்மியோட அம்மா மஞ்சள் காமாலை வந்து செத்துப் போச்சு.
கோயில்ல தீர்த்தம் குடிச்சா சரியாயிரும்ம்னு சொல்லிட்டு, மருந்து எதுவும் எடுக்காம, கிராமத்துக் கோயில்ல தீர்த்தம் மட்டும் வாங்கிக் கொடுத்து வச்சிருந்தோம்.நோய் முத்திப் போச்சு.டவுன் ஆஸ்பத்திரிக்கு, அதுக்கப்பறம் கொண்டு போனோம். பிழைக்காதுன்னு சொல்லிட்டாங்க டீச்சரம்மா. பிள்ளை போயி ஒரு மாசம் ஆச்சு." சொல்லிக்கொண்டிருக்கும் போது, அவர் மூளை வேலை செய்து கொண்டிருப்பதையும் கவனியாமல், மனது தன் ஈரத்தை கண் வழியே பாய்ச்சிக் கொண்டிருந்தது.அவரையும் அறியாமல் வந்த அழுகையை துடைத்துக் கொண்டு சொன்னார்.

டீச்சரம்மா.தைரியலக்ஷ்மிதான் என் மகளுக்கு கடைசி பிள்ளை.ரொம்ப செல்லம். அவ அம்மா, அவள அப்பி அப்பின்னு தான் கூப்பிடுவா. அவ அம்மாகிட்டதான் அப்பிட்டு கிடப்பா. 4 வயசு தானம்மா ஆகுது பிள்ளைக்கு. பிரிவு தாங்கல.அவ அம்மாகூட இருக்கும்போது அப்படி அழகாப் பேசுன மக"... துக்கம் தொண்டையை அடைக்க, செருமிக்கொண்டே தொடர்ந்தார். "அவ அம்மா செத்த அன்னிக்கி போன பேச்சு தான்.இன்னமும், குழந்தைக்கு பேச்சு
வரல.அம்மான்னு  மட்டும் தான் சொல்றா."

"இங்கயும் அம்மான்னு  மட்டும் தான் சொல்றா. வேற எதுவும் சொல்லல.டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனீங்களா? என்ன சொன்னாங்க."

"பக்கத்தில, ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனோம்.அதிர்ச்சியில பேச்சு போயிருக்கு.குழந்தைக்கு அம்மா நினைப்பு மறைய மறைய பேச்சு வர வாய்ப்பு இருக்கு.என்னால நிச்சயமா எதுவும் சொல்ல முடியாது.வேணும்னா, சென்னையில இருக்கிற ஒரு பிரபலமான ஆஸ்பத்திரிக்கு லெட்டர் தரேன். கூட்டிட்டு போறீங்களான்னு கேட்டாரு.அதுக்கெல்லாம் எங்கம்மா வசதி இருக்கு. இந்த வயசான காலத்தில மகளைப் பரிகொடுத்ததொடு மட்டுமில்லாமல், இந்த தண்டனை வேற எனக்கு." மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க பேசி முடித்தார்.

"அவ அப்பா இல்லியா. அவரு என்ன பண்றார்." கேட்டார் டீச்சர்.

"அந்த மனுசன் போன வருசம் என் மக செத்த அதே நாள்ல தோட்டத்தில பாம்பு கடிச்சு செத்துப் போனாரு.என்னத்தச் சொல்ல."

"அடக்கன்றாவியே.என்னய்யா, இப்படிச் சொல்றீங்க.தைரிய லக்ஷ்மியோட கூடப் பெறந்தவுங்க யாராவது இருக்காங்களா.இவ சின்னப் பொண்ணுன்னு சொன்னீங்களே."

"இருக்காங்க டீச்சரம்மா.இதோட கூடப்பிறந்தது ரெண்டு ஆம்பிளப் பிள்ளைங்க.
அது ரெண்டும் அம்மாவை அவ்வளவு தேடல.வெளில விளையாடப் போக,வர... 
என் மூத்த மக வீட்ல தான் எல்லோரும் இருக்கோம். ஆனாலும், தைரிய லக்ஷ்மியை மட்டும் ஆறுதல் படுத்தவே முடியல. விம்மி விம்மி அழுது ஏங்கிப் போகுது பிள்ளை." சொல்லிக் கொண்டிருந்த தன் தாத்தாவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவரையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது குழந்தை. தன்
அம்மாவைப் பற்றி தான் ஏதோ சொல்கிறார்கள் என்பது புரிய, தன் காதுகளை அகல விரித்துக் கேட்டுக்கொண்டிருந்தது குழந்தை.

அவர் சொல்லச் சொல்ல அந்த ஆசிரியை தன்னையே தன் கண் முன் பார்ப்பது போல உணர்ந்தாள். "இங்க வா செல்லம். எங்கிட்ட வா." தாத்தாவின் பின் ஒளிந்து இருந்தவளை கை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக்  கொண்டே சொன்னார். 

"பாப்பாவுக்கு நான் ஒண்ணு சொல்லவா. டீச்சருக்கு அஞ்சு வயசு இருக்கும் போதே எங்கம்மா என்னைய விட்டுட்டு செத்துப் போனாங்க." தைரிய லக்ஷ்மி அப்படியே வச்ச கண் வாங்காமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. ஆசிரியர் தொடர்ந்தார்.

"நானும் அழுதுகிட்டே இருந்தேன்.பிறகு தான் தோணுச்சு, சாமி எப்படி நம்ம கண்ணுக்கு தெரியாம இருக்கோ, அதே போல, அம்மாவும் என் கண்ணுக்கு
என் பக்கத்தில இருக்காங்கன்னு. நான் அழுதுகிட்டே இருந்திருந்தா, இன்னைக்கு ஒரு டீச்சரா ஆகியிருக்க முடியுமா, சொல்லு.என்னைப் போல
நீயும் ஒரு டீச்சரா ஆக வேண்டாமா? அழுதுகிட்டே இருந்தா படிக்க முடியுமா, சொல்லு குட்டிப்பாப்பா.பாப்பா இனிமே அழக்கூடாதாம், நான் சொல்றேன். பாப்பா இனிமே அழமாட்டாளாம்."

வாய் என்னதான் ஆறுதல்மொழி கூறினாலும், அந்தப் புது மொட்டின் ஏக்கம் புரியத்தான் செய்தது அவருக்கு.

"பாப்பாவுக்கு என்ன வேணுமோ எங்கிட்ட கேக்கலாம். நான் உனக்கு அம்மா
மாதிரி.நான் உடனே செஞ்சு தருவானாம். என்னைய இனிமே அம்மான்னே கூப்பிடலாம். சரியாம்மா," என்று சொல்லி நெற்றியில் அலைந்த முடிக்கற்றையை ஒதுக்கியவாறே கன்னத்தில் அழுத்தி முத்தமிட்ட போது அவரது ஒரு துளி கண்ணீர் பிள்ளையின் மேல் இமையில் பட்டுத் தெறித்தது.

டீச்சரையே ஆச்சரியமாகப் பார்த்தது அக்குழந்தை. அழுது அழுது வாட விட்ட கண் மலர்கள் மீது வானத்தின் முதல் துளி பட்டால் தெரியும், தெறிக்கும் மலர்ச்சியை அக்குழந்தையில் பார்க்க முடிந்தது. குழந்தை டீச்சரை பார்த்து "அம்மா" என்றது.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் சொன்னார். "இது போதும்மா.என் பிள்ள பேசிரும். நீங்க காட்டுற அன்பிலேயே இந்தக் குழந்தை நல்லா வரும்." என்று சொல்லி குழந்தையை நோக்கிக் குனிந்து சொன்னார்.

"பாப்பாவுக்கு தாத்தா நான் இருக்கேன்.இங்க பத்தியா, அம்மா இருக்காங்க. டீச்சர் அம்மா இருக்காங்க. டீச்சர் அம்மா - என்று அம்மாவை மட்டும் அழுத்திச் சொல்லி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசிரியர் ரெண்டாவது தாய் என்பதை மனத்தில் ஆழமாகப் பதிய வைத்தார் முதியவர்.