Sunday, 1 May 2011

குமரி கண்ட முத்து - குறும்பனை சி.பெர்லின்



மொழி என்பது உணர்வின் வெளிப்பாடு.இலக்கணமில்லாத மொழி கூட பிழைத்து நிற்கும். ஆனால் இல்க்கியமில்லாத மொழி பிழைத்து நிற்பது கடினம். தமிழ் மொழி தொன்று தொட்டு   இன்று மட்டும் வாழ்வதற்கு பெரிதும் உறுதுணையாக நிற்பது தமிழ் இலக்கியமே.ஒவ்வொரு நிலத்திற்கும் தனிச் சிறப்பு உண்டு. மக்களின் வாழ்வு, ஆதாரம், வாழும் முறை இவற்றை அம்மண்ணின் மைந்தர் வாயிலாக புரிந்து கொள்வது என்பது மகத்தான  ஒன்று.நால்வகை நிலங்களில் நெய்தல் நிலம் சார்ந்த தமிழ் இலக்கியம்  வளர்ந்து வரும் இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சிப்பிக்குள் விளைந்த முத்துதான் குறும்பனை சி.பெர்லின்.


இவரது மூன்றாவது சிறுகதைத்  தொகுப்பான நீந்திக்களித்த கடல் சுமார் பன்னிரண்டு சிறுகதைகளை உள்ளடக்கியது. அவற்றைப் பற்றிய ஒரு அலசல்.

நீந்திக்களித்த கடல் - சிறுகதைத் தொகுப்பை ஆர்வமுடன் எடுத்துப் படிக்கத் தொடங்கியதும்  நம் கண் முன்னே வந்து பரவுவது கரையில் மீனவர் படும் பாடு. 'சாம்பல் விளையாட்டோடு' ஆரம்பித்த சிறுகதைத் தொகுப்பு மீனவர்களின் சிறு சிறு சந்தோஷங்களை, பகிர்வை, ஒர்ருணர்வை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
              
                    ' நாங்க நெனச்சா' - கதையின் சாராம்சமே  படித்தவர்கள், மேதாவிகள், மீனவர் சமுகத்தை எவ்வாறு உருவகப்படுத்தி இருப்பர் என்பதை உணர்த்தவே உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரம் மகாலிங்கம். இளையோர் சக்தியை, ஜனநாயக யுக்தியை, தீர்வை, தீர்ப்பை தாம் இருக்கும் இடத்திற்கு தேடி வரவழைப்பது கதையின் சிறப்பம்சம்.

                  'கண்டால் தெரியும்' - சிறுகதை மீனவர் வாழ்க்கை கடலிலும், கரையிலும் படும் அல்லலை வெளிப்படுத்தி, கடலில் சுதந்திரமாய் திரியும் மீனவன் கரையில் சேர்ந்ததுமே சிறைப்படுத்தப்படும் சமூக அவலத்தை சித்திரமாய் நெஞ்சில் செதுக்கியிருக்கிறது.அம்புரோசின்  மகளை நமக்கு அறிமுகப்படுத்தாமலேயே அந்த சின்னந்சிறு குழந்தைக்காக மனதை ஏங்க வைத்திருக்கும் ஆசிரியரின் கதையமைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இடையிடையே கிறிஸ்தவ மதத்தின் சடங்குகள் காலத்தின் கட்டாயத்தால் ஏற்படுத்தப்பட்டவை  என்றும், அதன் பொருள் மறைந்து சடங்குகள் மட்டும் நிறைவேறப்படுகின்றது  என்பதை வெளிப்படையாக தேள் கொட்டுவது போல சொல்லியிருப்பது, ஆசிரியர் மாற்றங்களை விரும்புபவர், அதுவும் சமுதாய முன்னேற்றத்திற்கு உதவாத சடங்குகள், மதத்தை பிடித்திருக்கும் கட்டுக்களிலிருந்து விடுதலை தர எடுத்திருக்கும் ஒரு நல்ல முயற்சி.
              
                  'வேரறுந்த மரமாகி...' - கதைத் தலைப்பிலேயே அனாதையின் அர்த்தத்தை நீக்கமற தெரிவித்து சொந்த மண்ணையும்  சொந்த மக்களையும் வேரறுத்து விட்டு தன் சொந்த மண்ணிலேயே அன்னியனாகிப்போன, போகின்ற அவலத்தை சொல்லும் பெருங்கதையின் சிறு பகிர்வு.

                  'நாவிய ஓமலு'  - மீனவர் சமூகத்தைத் தாண்டி அவர்களை ஒட்டி வாழும் ஒரு ஒடுக்கப்பட்ட தாழ் நிலையில் உள்ள சமூகத்தினரை படம் பிடித்து காட்டுகிறது. ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தினரோடு ஒத்து, சார்ந்து வாழும் முறையை, அதனால் சமூகம் அடையும் சிறப்பை வலியுறுத்தி இருப்பது இக்கதையின் சிறப்பம்சம். சீமான் தன்னிலை விட்டு இறங்கி வந்து மன்னிப்புக் கேட்கும் தன்மையும், சோக்கின் அதை உடனே ஏற்று நட்புறவாடுவதும் மனித குலம் தழைக்க, வாழும் கலையை நமக்கு கொடுத்திருப்பது மிக அருமை.

               'தூக்கு கயிறு'  - சிறுகதை ஆரம்பித்த விதம், சுறுசுறுப்பு, தவிப்பு, பரபரப்பு ஆகியவை கதை முடிவில் காணாமல் போனதோடு மட்டுமல்லாமல், கதையின் கோணத்தை திருப்பி, மடமையில் வாழும் மக்களுக்கு ஒரு சம்மட்டி அடி.


               'கடல் நீவாடு கீழாட்டு' - கனவின் கருவை கண் வழியே செலுத்தி, இதயத்தில் பாய்ச்சி, பிசைந்து, மனதைத் தாக்கி, தகர்த்து, உருக்குலைத்து, பனிக்குடத்தை உடைத்து, வாழ்க்கையின் எதார்த்தத்தை நம் கைகளில் பிரசவித்திருக்கிறார் ஆசிரியர். வாழ்க்கையின் இடிபாடுகளில் சிக்கித் தவித்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைமுறை மானுட மகனின் ஒரு எடுத்துக்காட்டு.இச்சிறுகதை காற்றையும்,கடலையும், கடலைக் கிழிக்கும் இருட்டையும் நம் கண்களுக்கு பழக்கப்படுத்தி, வாழ்க்கையின் ரகசியத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் ஆசிரியர்.

                  'அடிடா கூட்டமணி' - நாகரீக நகரத்தில் புரையோடிப்போயிருக்கும் கந்து வட்டி, கடற்கரை கிராமங்களையும் விட்டு வைக்காமல் வட்டியில் குடும்பங்களை கூறு போட்டுக் கொண்டிருப்பதை, மனதைத் தைக்கும் வகையில் கொடுப்பதல்லாமல், சாமியாரின் அந்தரங்க வாழ்வை, பணியை, பணியில் குறைவை சொல்ல மனமில்லாமல் அடிக்கோடிட்டுக் காட்டி, பிறகு அவரது தீர்ப்பின் மூலமாக பணியின் குறைபாட்டை நிறைவானதாக காட்ட முயற்ச்சிதிருப்பது ஏமாற்றம்.


                'கள்ள கோழி' - பேயேன்னும் பேடித்தனம் மடமை என்று ஒதுக்கி, சில உண்மைகளை வெளிக்கொணரும் நேரம், கலகம்,கலகத்தினால் வளரும் கலவரம் - இவற்றை வைத்துப்பார்க்கும் போது மடமைத்தனத்தில் மடிவது மாண்பாகும்.


                'காணா கனவு' - மீனவரின் வாழ்வில் அறிவியலின் ஆற்றல், பங்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை ஐம்புலன்களுக்கும் கிட்டுமாறு உரக்க சொல்லியிருப்பது மனதை உறைய வைத்துள்ளது.


                  'பாம்படம்' - தொன்று  தொட்டு வரும் ஆண் மக்களின் சண்டை, சொத்துத்தகராறு, தாயின் பாசத்திற்கு சண்டையிடாமல், பாம்படத்திற்கும், பணத்திற்கும் சண்டையிடுவதை மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில், முடிவை யூகிக்கும் விதத்தில் கையாண்டுள்ளார் ஆசிரியர்.

                  'ஆனி ஆடி ஆத்தலும் தூத்தலும்' - ஒவ்வொரு சிறுகதையும் சிறு சிறு முத்தாக கோர்த்து எடுக்கும் வேளையில், கதை மாலையில் வைரக் கல்லாக ஜொலிப்பது 'ஆனி ஆடி ஆத்தலும் தூத்தலும்'.கதையின் சாராம்சம் மனித உறவின் மேம்பாடு, வலிமை, உயிரின் மதிப்பு ஆகியவை.மற்றவையெல்லாம் கடற்கரையில் அமர்ந்திருந்து எழும்போது நம் கால்களில் ஒட்டிக்கொண்டும், குத்திக்கொண்டும் இருக்கும் மணல் துகள்களுக்கு நிகரானவை. பகை, வெறுப்பு ஆகிய மணல் துகளை தட்டிஎடுத்தல் மட்டுமே வாழ்கையின் ஓட்டம் சீரான நேரோட்டமாகும்.

கதை, கற்பனையைச் சார்ந்து இருக்கும் என்ற கூற்றை பொய்யாக்கி, கதையையும், அதன் நாயகர்களையும் நிஜ வாழ்வில் இருந்து நகர்த்தி, தன்னுடைய புத்தக பக்கங்களின் மத்தியில் நிலைத்து வாசம் செய்து இருப்பவர் ஆசிரியர்.பெர்லினின் மொழி நடையானது குமரியின் சிணுங்கல் தமிழாக தொடங்கி, முடிவில் படிப்பவரது  உள்ளத்தையும், உணர்வையும் வெதும்பச் செய்கிறது.நிலப்பரப்பில் சிறிய மாவட்டமானாலும், அவரது உள்ளத் தேடல்களும், ஆவல்களும், குமரி மைந்தன் ஆற்றலை கடல் பரப்பிலும் பெரிதாக்கி, நம் மன பிரமிப்பினை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது.அவரது கலை வாழ்வு சிறக்க வாழ்த்துகள்.